மதுரை மாவட்டத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், குடியுரிமை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் ஆனையூர், உச்சப்பட்டி, திருவாதவூர் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் 1,377 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அரசால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டாலும் அகதிகள் என்றே பதிவு செய்யப்பட்டிருப்பதால் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த முகாம்களைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:
அகதிகள் முகாம்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தனியார் நிறுவனங்களில் கூட வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உள்ளது. உயர்கல்வி படித்தவர்கள்கூட கூலி வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது.
ஓட்டுநர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு செய்வது ஆகியவற்றில் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நீண்ட நாள்களாக முகாம்களில் தங்கி இருப்பதால் சமூக, பொருளாதார, கலாசார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
இலங்கையில் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அங்கு சென்று வாழ்வைத் தொடர வாய்ப்பு இல்லை.
ஆகவே, எங்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பெருக்கிக் கொள்ளவும் சகமனிதர்களாக சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றனர்.