கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் அருகே மேலையூரை சேர்ந்த செல்வகுருநாதன் தாக்கல் செய்த மனு:
பொதுவாக கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணி செய்யும் கிராமத்தில் தான் தங்க வேண்டும் என்பது அரசாங்க விதியாகும். ஆனால் மேலையூர் வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் இதற்கு முரணாக தான் பணி செய்யும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் தங்கி தினமும் வந்து செல்கிறார். அவர் காலை 11 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்துவிட்டு, பகல் 1 மணியளவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டு தான் தங்கும் இடத்திற்கு சென்றுவிடுகிறார். இதனால் விவசாயத்திற்கான மின்மோட்டார் வாங்குவதற்கான தகுதிச் சான்றிதழ் உள்பட பல அரசு உதவிகளை மக்களால் பெற முடியவில்லை. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த மார்ச் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். அதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மேலையூர் கிராம நிர்வாக அலுவலர் மேலையூர் வருவாய் கிராமத்திலேயே தங்கிப் பணியாற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை விட்டு வெளியே செல்ல வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதை மீறும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது வரும் புகார்களை விசாரிக்க வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் இரு வட்டாட்சியர்கள் அந்தஸ்துள்ள அதிகாரிகளை , மாவட்ட ஆட்சியர் நியமிக்க வேண்டும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்பான புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.