மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பல தனியார் மையங்கள் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் இருந்து தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் இருந்து தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு முறைகேடாக பணம் வசூலித்தல் மற்றும் தேர்வு எழுதாத மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதாக பட்டச் சான்றிதழ் வழங்கியதும் இதற்காக கோடிக்கணக்கில் பணம் வசூலித்தாகவும் புகார் எழுந்தது.
இந்த புகார்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மு. கிருஷ்ணன் பதவி ஏற்றதும் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் தொலைநிலைக் இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டன.
இதில் தொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் மீது நடவடிக்கை எடுப்பது என்று சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது: தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மற்றும் சிலர் மீது உள்ள முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கையாக பல்கலைக்கழகம் தன்னிச்சையாக எடுக்காமல் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி அதன்அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில், முன்னாள் துணைவேந்தர் ஒருவர் மற்றும் தணிக்கையாளர் ஒருவர் ஆகிய மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தொலைநிலைக் கல்வி இயக்கக முறைகேடுகள் தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.