கல்லூரி மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மதுரை அந்தனேரியைச் சேர்ந்த ஜோதிடர் ராஜூ. இவருக்கு ஒரு மகள், இருமகன்கள் உள்ளனர். மூத்த மகள் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே 22 இல் ராஜூ வெளியூர் சென்றிருந்த நிலையில் கல்லூரி மாணவியான அவரது மூத்த மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியவரை கைது செய்து நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியது: மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு அதேபகுதியைச் சேர்ந்த மின்னல்ராஜ் என்பவர் தான் காரணம். பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால், மாணவி தற்கொலை
செய்து கொண்டுள்ளார். ஆகவே, அவரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.