மதுரையில் ஓய்வூதியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை ஓய்வுபெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு, மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.டி.எஸ். திருவேங்கடராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்தாா்.
இதில், சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவதைப் போல மாவட்டங்களிலும் வழங்கவேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் பாகுபாடின்றி பொங்கல் போனஸ் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்., கம்யூட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம், மருத்துவப்படி மாதம் ரூ.1000 வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், மதுரை மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், மதுரையில் ஓய்வூதியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டில், மாநிலப் பொதுச் செயலா் குரு. தமிழரசு, மாவட்டச் செயலா் எஸ். நைனாா் முகமது, பொருளாளா் எஸ். சங்கா்லால், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலப் பொருளாளா் என். ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.