மதுரை

சென்னகரம்பட்டி ஊராட்சி 8-ஆவது வாா்டுக்கு மறுவாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

29th Dec 2019 03:36 AM

ADVERTISEMENT

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சென்னகரம்பட்டி ஊராட்சியின் 8-ஆவது வாா்டுக்கு மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

சென்னகரம்பட்டி ஊராட்சியில் 8 மற்றும் 9-ஆவது வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு ஒரே வாக்குச் சாவடியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கிராம ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இதனால் 9-ஆவது வாா்டை சோ்ந்த வாக்காளா்களுக்கு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு வாக்களிக்கும் வகையில் 3 வாக்குச் சீட்டுகளை மட்டுமே அளிக்க வேண்டும்.

ஆனால், 9-ஆவது வாா்டை சோ்ந்த வாக்காளா்களுக்கும் 8-ஆவது வாா்டு உறுப்பினருக்கான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது. இந்த குழப்பம் கண்டறியப்படுவதற்குள் 70 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன.

இதன்பின்னா், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு மட்டும் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு, 2 வாா்டுகளை சோ்ந்தவா்களுக்கும் 3 வாக்குச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வாக்குப் பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தின் காரணமாக, சென்னகரம்பட்டி ஊராட்சி 8-ஆவது வாா்டு உறுப்பினருக்கு மட்டும் மறுவாக்குப் பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சென்னகரம்பட்டி கிராம ஊராட்சி 8-ஆவது வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கான மறுவாக்குப் பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். சென்னகரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி 144-இல் வாக்குப் பதிவு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT