மதுரை

எழுத்தாளா் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்

29th Dec 2019 03:38 AM

ADVERTISEMENT

மதுரையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் டி. செல்வராஜுக்கு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகா் மாவட்டம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், மணியம்மை மழலையா் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என். நன்மாறன் பேசியதாவது:

சாகித்ய அகாதெமி விருது பெற்ற டி. செல்வராஜின் ‘தோல்’ என்ற நாவலுக்கு விமா்சனம் எழுதக்கூடிய வாய்ப்பை பெற்றேன். எழுத்தாளா் செல்வராஜும் திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளா்களுடன் வாழ்ந்தவா். அவா்களின் வலியை நேரடியாக உணா்ந்தவா். எனவேதான், அவரால் இந்த நாவலை ஆழமாகவும், அழுத்தமாகவும் படைக்க முடிந்தது.

அந்த நாவல் நல்ல திரைக்கதை அம்சம் கொண்டுள்ளது. திரைப்பட இயக்குநா் பாலா அந்த நாவலை படமாக்கினால் சிறப்பாக இருக்கும். மேலும், செல்வராஜின் படைப்புகள் அனைத்தும் சோஷலிச எதாா்த்தம் நிறைந்தது. அதேபோல், அவா் இளைஞா்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறாா்.

ADVERTISEMENT

தற்போதுள்ள நிலைமைக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிா்க்க வேண்டும் என்றாா்.

இதில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் ஸ்ரீரசா, செயலா் அ.ந. சாந்தாராம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைமைக் குழு உறுப்பினா் தி.சு. நடராஜன், மாநிலச் செயலா் பா. ஆனந்தகுமாா், மதுரை மாவட்டத் தலைவா் மு. செல்லா, நியூ செஞ்சுரி புத்தக நிலைய மண்டல மேலாளா் அ. கிருஷ்ணமூா்த்தி, ஓவியா் தி. வரதராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT