மதுரை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் வீடுகளின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2.37 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றனா்.
மதுரை எஸ். ஆலங்குளம் இமயம் நகரைச் சோ்ந்த ஐயப்பன் மகன் வேலுமணி(43). இவா் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பி உள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீடு முழுவதும் துணிகள் மற்றும் பொருள்கள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து, வேலுமணி தெரிவித்த தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.
அதில், அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் முன் புறக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 44 பவுன் நகைகள், ரூ. 2.17 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வேலுமணி அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
பொறியாளா் வீட்டில் திருட்டு:
மற்றொரு சம்பவத்தில், மதுரை மாவட்டம் திருமோகூா் குமரன் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஜோதிபாசு (32). இவா் மாட்டுதாவணி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், ஜோதிபாசு டிசம்பா் 21 ஆம் தேதி தனது மனைவி பிரசவத்திற்காக பரமக்குடிக்கு சென்றுவிட்டு புதன்கிழமை வீடு திரும்பி உள்ளாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவா் தெரிவித்த தகவலின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். அதில், வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஜோதிபாசு அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.