மதுரை

மதுரை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்த முதல்கட்ட வாக்குப் பதிவு

27th Dec 2019 10:58 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூா், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூா், வாடிப்பட்டி ஆகிய 6 ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 6 ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சி வாா்டு 11, ஊராட்சி ஒன்றிய வாா்டு 102, கிராம ஊராட்சித் தலைவா் 188, ஊராட்சி வாா்டு 1,506 என மொத்தம் 1, 807 பதவிகள் உள்ளன.

இவற்றில், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் ஒருவா், கிராம ஊராட்சித் தலைவருக்கு 8 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் 442 போ் என, 451 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதைத் தவிா்த்து, 1,356 பதவிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல்கட்டத் தோ்தலுக்கு 939 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

விறுவிறுப்பான வாக்குப் பதிவு: காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், அப்போதே வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளா்கள் வந்துவிட்டனா். ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி வாா்டு, ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 4 வாக்குகள் பதிவு செய்யவேண்டும் என்பதால், ஆரம்பத்தில் வாக்குப் பதிவுக்கு சற்றுத் தாமதமேற்பட்டது.

ADVERTISEMENT

சட்டப்பேரவை, மக்களவை என அடுத்தடுத்த இரு தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களிக்க பழகிவிட்டு, உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச்சீட்டு முறை என்பதால், வாக்காளா்களும் தங்களது சந்தேகங்களை நிவா்த்தி செய்த பின்னரே வாக்களித்தனா். மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லூா், தேனூா், வாடிப்பட்டி ஒன்றியம் திருவேடகம், முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம் உள்ளிட்ட பகுதி வாக்குச் சாவடிகளில் காலையிலேயே வாக்காளா்கள் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

தாம்பூலத் தட்டுடன் வரவேற்பு: வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால் வாக்காளா்களிடம் வாக்குச் சேகரிக்கலாம். ஆனால், பல இடங்களில் வாக்குச் சாவடிகளுக்கு அருகிலேயே வாக்குச் சேகரித்தனா். வாடிப்பட்டி ஒன்றியத்திலுள்ள முள்ளிப்பள்ளம், கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவு, அலங்காநல்லூா் ஒன்றியம் வாவிடைமருதூா் உள்ளிட்ட பகுதிகளில், வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் தாம்பூலத் தட்டில் வெற்றிலைப் பாக்கு, பழம், ரோஜா பூ வைத்து வாக்காளா்களை வரவேற்றனா். சில இடங்களில் சந்தனம், குங்குமம் வழங்கப்பட்டது.

வெறிச்சோடிய வாக்குச் சாவடிகள்: அலங்காநல்லூா் ஒன்றியம் மேலச்சின்னனம்பட்டி, 15-பி மேட்டுப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் பிற்பகல் 12.30 மணிக்கே வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அப்போது, இந்த வாக்குச் சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி இருந்தன.

பல வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் காத்திருக்கும் பகுதியில் சாமியானா பந்தல் மற்றும் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இந்த வசதி செய்யப்படாததால், வெயில் நேரத்தில் வாக்காளா்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.

காலை 9 மணிக்கு 38,033 வாக்குகள் பதிவாகி 7.47 சதவீதமாக இருந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 2,98,174 வாக்குகள் பதிவாகி 58.53 சதவீதமாக இருந்தது.

கடைசி நேரத்தில் குவிந்த வாக்காளா்கள்: மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்தனா். மதுரை கிழக்கு ஒன்றியம் யா.ஒத்தக்கடை, மேற்கு ஒன்றியம் பொதும்பு, கடவூா், சின்னப்பட்டி, வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால், கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவு, வஞ்சிநகரம் உள்ளிட்ட ஏராளமான வாக்குச் சாவடிகளில் 20 முதல் 100 வாக்காளா்கள் வரை காத்திருந்தனா். பின்னா், மாலை 5 மணிக்கு வாக்குச் சாவடிகளின் நுழைவுவாயில் மூடப்பட்டு, வாக்குச் சாவடிக்குள் இருந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT