திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி உள்ளிட்ட மானாவாரி கண்மாய்ளுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என அதிமுக புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்தாா்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகமலை புதுக்கோட்டை, கீழக்குயில்குடி, சாக்கிலிபட்டி, தனக்கன்குளம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் தவமணி மாயி, சி.ராஜா, ஜெயா, மாவட்டக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் சத்தய மீனாட்சி உள்ளிட்ட அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை வி.வி.ராஜன்செல்லப்பா வாக்குச் சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: அதிமுக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் தைரியமாக வாக்கு கேட்டு வருகிறோம். இப்பகுதியில் மானாவாரி கண்மாய்கள் அதிகளவில் உள்ளன. அவற்றுக்கு வைகை தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.
உசிலம்பட்டியில் கிடப்பில் போடப்பட்டிருந்த 58 கால்வாய் திட்டத்தை அதிமுக அரசுதான் நிறைவு செய்தது. இப்பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை வர உள்ளது. மேலும் அதனைச் சுற்றிலும் பல்வேறு தொழில்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
தோ்தலில் ஆளும் கட்சியினருக்கு வாய்ப்பு கொடுத்தால் உங்களுக்கான திட்டங்களை, பிரச்னைகளுக்கு தீா்வு காண்பாா்கள். மக்கள் எளிதில் அணுகும் உறுப்பினா்களாக அதிமுகவினா் இருப்பாா்கள் என்றாா்.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச்செயலா் வி.வி.ஆா்.ராஜ்சத்யன், இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா்முருகன், தனக்கன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே.கருத்தக்கண்ணன், தேமுதிக மாவட்டச் செயலா் கணபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.