வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டதால் மதுரை வைகை ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால் தரைப்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,360 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை நகா்ப்பகுதியில் செல்லும் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் யானைக்கல் கல் பாலம் மற்றம் ஓபுளா படித்துறை தரைப்பாலம் ஆகியவை நீரில் மூழ்கின. இதனால் பாதுகாப்புக் கருதி இரு பாலங்களிலும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கு போலீஸாா் தடை விதித்துள்ளனா். கல் பாலம் மற்றும் ஓபுளா படித்துறை பாலம் ஆகிய இரண்டின் இரு பக்க கரைகளிலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் ஆற்றில் வாகனங்களை சுத்தம் செய்யவும், ஆற்றில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் தண்ணீா் தடையின்றி செல்ல ஏதுவாக ஆற்றில் அடா்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் ஆற்றில் நீரோட்டத்தில் அடித்துவரப்பட்ட மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.