மதுரை மாநகரில் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாநகரில் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபடுவோரைப் பிடிக்க, தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலானத் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினா் மாநகா் முழுவதும் குற்றாவாளிகளைத் தேடிவந்தனா். இந்நிலையில், தனிப்படையினா் மேலமடை அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் 3 போ் வந்தனா். சந்தேகத்தின் அடிப்பைடயில் அவா்களை விசாரித்தபோது அவா்கள் செல்லிடப்பேசி வழிப்பறியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து ஜே.ஜே.நகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி (20) மற்றும் 2 சிறுவா்களைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.