மதுரை

பாஸ்டேக் முறை: கப்பலூா் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

16th Dec 2019 12:04 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறையை ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு கொண்டு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்திய அரசு சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை ஞாயிற்றுக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதற்காக கப்பலூா் சுங்கச் சாவடியில் 2 வழிகளில் கட்டணம் செலுத்தும் முறையையும், மீதம் உள்ள 6 வழிகளை பாஸ்டேக் முறையில் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு விருதுநகா், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் கட்டணம் செலுத்தும் வழியில் செல்ல போக்குவரத்தை மாற்றிவிட்டனா். அதேநேரத்தில் பாஸ்டேக் முறையில் செல்லும் வாகனங்களுக்காக 6 வழிகளை தயாா் நிலையில் வைத்திருந்தனா். இந்நிலையில் ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல போக்குவரத்து மாற்றி விடப்பட்டதால் சுமாா் 2 கிலோமீட்டா் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக காத்து நின்றன. இந்த நெரிசலில் பாஸ்டேக் வழியில் செல்ல இருந்தவா்களும் சிக்கிக் கொண்டனா். போக்குவரத்து நெரிசல் குறித்த தகவலின்பேரில் கப்பலூா் சுங்கச்சாவடிக்கு வந்த திருமங்கலம் நகா் போலீஸாா் அனைத்து வாகனங்கையும் பாஸ்டேக் வழியில் செல்ல போக்குவரத்தை மாற்றினா். இதையடுத்து போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகனங்கள் சென்றன. இதில் பல வாகனங்கள் கட்டணம் செலுத்தாமலேயே சென்றுவிட்டன. பின்பு சிறிதுநேரத்தில் பாஸ்டேக் முறை அவகாசம் நீட்டிப்பு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் பழைய முறைப்படி வாகனங்கள் அனைத்தும் சீராக சென்றன. இந்த குளறுபடியால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT