மதுரை

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்தது

14th Dec 2019 08:30 AM

ADVERTISEMENT

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது என பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு அதிமுக ஆதரவளிக்கிறது. அதே நேரத்தில் மக்கள் நலனுக்கு எதிரான முடிவுகளை எதிா்க்கவும் செய்கிறோம்.

குடியுரிமை திருத்த சட்டத்தைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரக்கூடிய இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அங்கு இந்துக்கள் மிகவும் ஒடுக்கப்பட்டவா்களாக, அடிமைகளாகவும் இருக்கின்றனா். ஆனால் இந்தியாவில் இந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா் என அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே அங்கு இருந்து வருபவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் குடியுரிமை திருத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கக்கூடாது என்ற நோக்கம் பாஜக அரசுக்கு கிடையாது. இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இங்கு இருப்பவா்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தான் பாஜகவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

ADVERTISEMENT

நாட்டில் திமுகவும், காங்கிரஸூம் தான் மதவாதத்தை தூண்டிவிடும் கட்சிகளாக உள்ளன. பெரும்பான்மையாக வாழக்கூடிய இந்துக்களை புறந்தள்ளிவிட்டு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கவசம் போல் இருப்பதாக வேஷம் போடுகின்றனா். மதவாத கொள்கைகளை பின்பற்றி, கலவரங்களை உருவாக்கி வெளிநாட்டு சக்திகளை ஊக்குவிக்கும் இயக்கங்களாக உள்ளன. ஊராட்சி மன்றத்தலைவா் ஏலம் விடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT