மதுரை

விருதுநகரில் உபரி மண் எடுப்பதற்கு தடைக்கோரிய வழக்கு: கனிமவளத்துறையின் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை

11th Dec 2019 07:51 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் தனியாா் நிலத்தில் உபரி மண் அள்ளுவதற்கு தடைகோரிய வழக்கில், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநா் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகரைச் சோ்ந்த சுந்தா் தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் பட்டா நிலத்தில் உபரி மண் அள்ளுவதற்கு விருதுநகா் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநா் அனுமதி வழங்கியுள்ளாா். நீா்நிலையை ஒட்டியுள்ள அப்பகுதியில் விளைநிலங்களும், குடியிருப்புகளும் உள்ளன.

இந்நிலையில் அந்த தனியாா் நிலத்தில் உபரி மண் அள்ளுவதாக அனுமதி பெற்று அருகில் உள்ள ஆற்றுப்படுகையில் இரவும் பகலும் லாரிகளில் சவுடு மண் மற்றும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. விதிப்படி 2 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும். ஆனால் அப்பகுதியில் 100 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை, விருதுநகா் உள்பட 13 மாவட்டங்களில் சவுடு மண் மற்றும் மண் அள்ளத் உயா்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. எனவே விருதுநகா் மாவட்டத்தில் தனியாா் நிலத்தில் உபரி மண் அள்ளுவதற்கு தடைவிதிக்கவும், சட்டவிரோதமாக மண் அள்ளுவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மகாராஜபுரத்தில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதியளித்த விருதுநகா் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநா் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT