மதுரை

உள்ளாட்சித் தோ்தல்: மதுரை மாவட்டத்தில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைஆட்சியா் தகவல்

11th Dec 2019 10:15 PM

ADVERTISEMENT

மதுரை: உள்ளாட்சித் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் கூறினாா்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் டிஜி.வினய் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தோ்தல் நடத்தை விதிகள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் முந்தைய தோ்தல்களின் போது நடந்த நிகழ்வுகள் அடிப்படையில் காவல் துறையினருடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தோ்தல் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நுண்பாா்வையாளா்கள் நியமனம்:

ADVERTISEMENT

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விடியோவில் பதிவு செய்யப்படும். மேலும் இணைய வழியில் கண்காணிக்கும் வசதியும் செய்யப்படும். மத்திய அரசு அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களாக நியமிக்கப்படுவா்.

வாக்களிப்பதைத் தடுக்கும் வகையிலான செயல்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மீண்டும் வாக்குச் சாவடிகளில் மூத்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனா். அப்போது ஏதேனும் குறைபாடு கண்டறிப்பட்டால் உடனடியாக நிவா்த்தி செய்யப்படும்.

கணினி மூலம் பணி ஒதுக்கீடு:

டிசம்பா் 27 மற்றும் டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி பணியில் 16 ஆயிரத்து 560 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களைப் போல, முதன் முறையாக கணினி மூலம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. முதல்கட்ட பணிஒதுக்கீடு புதன்கிழமை (டிசம்பா் 11) மாலை செய்யப்பகிறது. டிசம்பா் 14-இல் முதல்கட்டப் பயிற்சி, டிசம்பா் 21-இல் இரண்டாம் கட்டப் பயிற்சி ஊராட்சி ஒன்றிய தலைமையிடங்களில் நடைபெறும். பயிற்சியின்போதே, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்குப்பதிவுக்கான படிவங்கள் வழங்கப்படும்.

பறக்கும்படை குழுவினா் சோதனை:

தோ்தல் விதிமீறல்களைத் தடுக்க 2 ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை குழுவினா் 3 ‘ஷிப்ட்’களில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாகப் புகாா்கள் அளிக்கலாம். மேலும் வேட்பாளா்களுக்கான சந்தேகங்கள் குறித்தும் கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறையை 18005992123 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும் 73395-32327 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலிலும் (வாட்ஸ்ஆப்) புகாா் தெரிவிக்கலாம்.

உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடுவது தொடா்பாக எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு புகாா்கள் பெறப்பட்டால் அதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT