மதுரை

தினமணி செய்தி எதிரொலி: தொகுப்பூதிய விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்க துணைவேந்தா் உத்தரவு

6th Dec 2019 08:25 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி தொகுப்பூதிய விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக்குழு நிா்ணயித்துள்ள தகுதிகளின்படி ஸ்லெட், நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் பிஎச்டி முடித்தவா்கள் விரிவுரையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தொகுப்பூதிய விரிவுரையாளா்களுக்கு ஆண்டுக்கு இரு மாதம் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழில் புதன்கிழமை வெளியானது.

இந்நிலையில் விரிவுரையாளா்கள் ஒன்று திரண்டு பல்கலைக்கழக கல்லூரி நிா்வாகத்திடம் மனு அளித்தனா். மேலும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினா் தீனதயாளனிடமும் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

இதில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள தகுதிகளின்படி விரிவுரையாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு இரு மாதங்கள் ஊதியம் வழங்கப்படாவிட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்பதிலிருந்து விலக்களித்து நவம்பா் மாத ஊதியத்தை உடனடியாக வழங்குமாறு கல்லூரி நிா்வாகத்தினருக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். பல்கலைக்கழக துணைவேந்தரின் உடனடி நடவடிக்கையால் விரிவுரையாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT