மதுரை

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு: பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

29th Aug 2019 08:54 AM

ADVERTISEMENT

மதுரை  மாட்டுத்தாவணி  பேருந்து நிலையம் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை ஆஜராகினார்.
மதுரையில்  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள கண்மாயை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில் ஒரு தனியார் ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிப்பு என வட்டாட்சியர்  அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 
ஆனால் அந்த கண்மாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்றும், பொதுப்பணித்துறைதான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்து விட்டது. 
கண்மாய் இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் கட்டப்பட்டிருப்பது உறுதியான நிலையிலும், ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த தெய்வம் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மணிவாசகம் ஆஜராகினார். 
அவர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT