திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பரம்பு மேடு பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பரம்பு மேடு பகுதியையொட்டி சம்பக்குளம், பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விமான நிலையம் செல்லும் சாலையோரத்தில் கடந்த சில நாள்களாக மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. மதுரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருந்து காலாவதியான மருந்துப் பொருள்கள், ஊசிகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவைகளை இப்பகுதியில் கொட்டி வருகின்றனர். இதுதவிர கிராமப் பகுதிகளிலும், நான்கு வழிச்சாலை மற்றும் கண்மாய்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, மழைக் காலத்தில் கண்மாய் நீரோடு கலந்து நிலத்தடி நீரையும் பாதிக்கிறது என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் விமான நிலையத்தின் அருகே மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் உணவுக்காக அதிகளவில் பறவைகள் வருகின்றன . பறவைகளால் விமான விபத்து ஏற்படக்கூடாது என விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற குப்பைகளால் அதிகளவில் பறவைகள் வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக உச்சப்பரம்பு மேடு பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும் இதுபோல மருத்துவக் கழிவுகளை கொட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.