மதுரை

மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நீர்நிலைகள் அறிவிப்பு

27th Aug 2019 10:36 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கான நீர்நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் த.சு.ராஜசேகர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு காவல் துறையின் முன்அனுமதி பெற வேண்டும். அதேபோல, வழிபாடு செய்த பிறகு காவல் துறையினரின் வழிகாட்டுதல்படி ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும். மதுரை நகர் பகுதியில் வழிபாடு செய்யப்படும் சிலைகள், வைகை வடகரை கீழ்தோப்பு பகுதி,  தைக்கால் பாலம், ஒத்தக்கடை குளம், திருப்பரங்குன்றம் செவந்திகுளம் கண்மாய், அயன்பாப்பாகுடி கண்மாய் ஆகிய இடங்களில் விசர்ஜனம் செய்யலாம்.  
மேலூர் வட்டத்தில் மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி திரெளபதி அம்மன் கோயில் தெப்பம், வாடிப்பட்டி வட்டத்தில் குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை ஆறு, தாமோதரன்பட்டி, தென்கரை, அய்யனார் கோயில் ஊருணி, பெரியாறு கால்வாய்,  திருமங்கலம் வட்டத்தில் குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல நதி, பேரையூர் வட்டத்தில் மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊருணி, எழுமலை பெரிய கண்மாய், தே.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய், உசிலம்பட்டி வட்டத்தில் நீர் அதிகம் உள்ள கிணறுகளில் சிலைகளை விசர்ஜனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
களிமண், காகிதக்கூழ், மரக்கூழ் ஆகியவற்றால் செய்யப்பட்டு ரசாயனக் கலவையற்ற வர்ணம் பூசப்பட்ட சிலைகள் மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்துவதை உறுதி செய்ய 
வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன்,  மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT