மதுரை

முறையாக ஊதியம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 28 -இல் தர்னா போராட்டம்

23rd Aug 2019 09:52 AM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாக ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கக்கோரி, ஆகஸ்ட் 28 ஆம் தேதி மதுரையில் குடும்பத்துடன் தர்னாவில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை தொலைத் தொடர்பு மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகள் என்.சோனைமுத்து, கே.வீரபத்திரன், ஆர்.சுப்புராஜ் ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: 
நாடு முழுவதும் 1.25 லட்சம் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். 
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 360 பேர் பணியாற்றி வருகின்றனர். 
இவர்களில் 160 பேர் கேபிள் பணியிலும், 200 பேர் துப்புரவு உள்ளிட்ட இதரப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை. இதனால் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, வீட்டு வாடகை செலுத்துவது மற்றும் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
வீட்டு வாடகை செலுத்தாததால் பல தொழிலாளர்கள் வீடுகளை காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நிதி வழங்கவேண்டும். 
பல தொலைத் தொடர்பு மாவட்டங்களில் ஜனவரி முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிர்வாகம் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். இதுகுறித்து மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் முறையாக ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கக்கோரி ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்துடன் தர்னாவில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.
 அன்றைய தினம் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பில் மதுரையில் தர்னா போராட்டம் நடத்த  உள்ளோம், என்றனர்.
பிஎஸ்என்எல் மதுரை மாவட்டச் சங்க செயலர் செல்வின் சத்தியராஜ், நிர்வாகிகள் ஜி.சந்திரமோகன், ரிச்சர்ட் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT