மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் பேரையூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறையும், வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் மையமும் இணைந்து நடத்திய இக் கருத்தரங்கை, மாவட்ட ஆட்சியர் த.சு. ராஜசேகர் தொடக்கி வைத்தார். கடந்த ஆண்டில், மக்காச் சோளப் படைப்புழு தாக்கத்தால், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, தே.கல்லுப்பட்டி வட்டாரங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
நிகழாண்டில், படைப்புழு தாக்கத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இக் கருத்தரங்கில் பேசிய ஆட்சியர், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவுக்கு விதை நேர்த்தி செய்யப்பட்ட மக்காச்சோள விதைகள், வேளாண் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இந்த விதைகளை வாங்கி விதைப்பு செய்யவேண்டும். மேலும், படைப்புழுவைக் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு, வேப்ப எண்ணெய் ஆகியவற்றை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சார்பில், 110 விவசாயிகளுக்கு கடன் அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். இதில், வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) விவேகானந்தன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலெட்சுமி, பேரையூர் வட்டாட்சியர் ஆனந்தி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.