மதுரை

மதுரை ரயில்வே கோட்டத்தில் 4 மாதங்களில் ரூ.196.93 கோடி வருமானம்

16th Aug 2019 07:13 AM

ADVERTISEMENT

மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில், கடந்த 4 மாதங்களில் 1.75 கோடி பயணிகள் பயணித்ததன் மூலம் ரூ.196.93 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என  மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் பேசினார்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் 73 ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மதுரை ரயில்வே காலனி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மதுரை கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் தேசியக் கொடி ஏற்றினார். 
பின்னர் அவர் பேசியது:  இந்த நிதியாண்டில் கடந்த 4 மாதங்களில் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 1.75 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.196.93 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.19 சதவீதம் அதிகமாகும். 
கடந்த 4 மாதங்களில் மதுரை கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து  அபராதத் தொகையாக ரூ.1.70 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 14.57 சதவீதம் அதிகமாகும். 
விரைவு ரயில்கள் 90.4 சதவீதமும்,  பயணிகள் ரயில்கள் 95.3 சதவீதமும் காலந்தவறாமல் இயக்கப்பட்டுள்ளன. ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 186 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்களில் கூடுதலாக தலா ஒரு குளிர்சாதனப் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் - திருப்பதி மற்றும் ராமேசுவரம் - கன்னியாகுமரி விரைவு ரயில்கள் நவீன வசதிகளுடன் கூடிய "உட்கிரிஷ்ட்' ரயில் பெட்டித் தொடராக மாற்றப்பட்டுள்ளன. 
அதேபோல மதுரை - சென்னை வைகை விரைவு ரயில், காரைக்குடி - சென்னை பல்லவன் விரைவு ரயில் மற்றும் ராமேசுவரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் ஆகியவற்றில் உயர்தர வசதிகளுடன் கூடிய "எல்எச்பி' ரயில் பெட்டித் தொடராக மாற்றப்பட்டுள்ளன.
பயணிகள் வசதிக்காக ரூ.40 லட்சம் செலவில் மதுரை ரயில் நிலையத்தின் வெளி வளாகப் பகுதியில் நவீன கழிப்பறையும், ஒருங்கிணைந்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திர மையமும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை, ராமேசுவரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களில் ரூ.78 லட்சம் செலவில் நடைமேடை மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் வெளி வளாகப் பகுதி ரூ.20 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட இருக்கின்றன. சாத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல் ரயில் நிலையங்களில் ரூ.28 லட்சம் செலவில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடையநல்லூர், குண்டரா ரயில் நிலையங்களில் ரூ.1.5 கோடி செலவில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொட்டாரக்கரா ரயில் நிலையத்தின் வெளி வளாக மற்றும் முகப்புப் பகுதி ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்தை அழகு படுத்தும் விதமாக வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார உபயோகத்தை சிக்கனப்படுத்த 260 எல்இடி விளக்குகள்  பொருத்தப்பட்டுள்ளன, என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT