மதுரை

பெரியாறு அணையில் இருந்து வைகைக்கு தண்ணீர் திறக்க ஆட்சியரிடம் எம்பி, எம்எல்ஏ வலியுறுத்தல்

16th Aug 2019 07:22 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.
 மதுரை மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் ஆகியோரை தனித்தனியாக புதன்கிழமை சந்தித்த அவர்கள்,  மதுரை மாநகரப் பகுதி மக்களின்  குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
 பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியது: 
மதுரை மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு - வைகை அணைகள் உள்ளன. கேரளத்தில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நல்ல நிலையில் உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியுள்ளது. அதேநேரம், வைகை அணை நீர்மட்டம் 39 அடியாக இருக்கிறது. ஆகவே, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்குத் தண்ணீரைத் திறக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது. மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தான் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் அதிகம் இருக்கின்றன. இதுதொடர்பாக,  கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி, ஏற்கெனவே சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
 மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விரிவாக்கப் பகுதிகளுக்கு ரூ.380 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அப்பணிகள் தொடங்கவுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். அப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதோடு, பெரியாறு அணையில் இருந்து வைகைக்கு தண்ணீரைத் திறந்து,  தற்போது மதுரை மாநகரப் பகுதியில் 4 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் என்பது 2 நாள்களுக்கு ஒரு முறை என மாற்றவும் மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம்  என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி (திமுக), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரை மாநகர் மாவட்டச் செயலர் ரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT