மதுரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

16th Aug 2019 07:15 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள முதியோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு மதுரை மாவட்ட நீதிபதிகள் சார்பில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமா பானு கொடியேற்றினார். இதையடுத்து மதுரை மாவட்ட நீதிபதிகள் சார்பில், மதுரை அருகே உலகநேரியில் உள்ள ரோஜாவனம் முதியோர் காப்பகம் உள்பட மதுரையில் உள்ள 4 காப்பகங்களில் தங்கியிருக்கும் முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு உடைகள், படுக்கை வசதி, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
 மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மூத்த வழக்குரைஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜா சார்பில் 73 மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், செயலர் மோகன்குமார், துணைத் தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 73- ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் கொடியேற்றினார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பிரதான வாயிலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நீதிபதி கே.ரவிசந்திரபாபு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி, வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.எம்.சுப்ரமணியம், நிஷா பானு உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும்  வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உயர்நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர் சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT