மதுரை

நீர்நிலைகளை ஆக்கிரமித்து பட்டா வாங்கியிருந்தால் உடனடியாக ரத்து: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

11th Aug 2019 05:32 AM

ADVERTISEMENT


நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், நீர்நிலைகளை ஆக்கிரமித்து பட்டா வாங்கியிருந்தால் அவை உடனடியாக ரத்து செய்யப்படும் என்று, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு வட்டம், மாடக்குளம் கண்மாய் கரைநெடுக  800 மீட்டர் முதல் 2,900 மீட்டர் வரை கடந்த 2016-2017 இல் புனரமைக்கப்பட்டது. தற்போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 85 லட்சத்தில் எஞ்சிய பகுதியில் கரையை பலப்படுத்தும் பணியை, அமைச்சர் தொடக்கிவைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. 
மழைநீரைச் சேமிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் ரூ.43 கோடி செலவில் 135 கண்மாய்கள் தூர்வாரப்பட உள்ளன. தென்கால், நிலையூர் கண்மாய் போன்ற பல கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மழைநீர் சேமிக்கப்பட்டதால், மதுரையில் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் பட்டா வாங்கியிருந்தாலும் உடனடியாக ரத்து செய்யப்படும்.    
வைகை அணையைத் தூர்வாருவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார். இதில் அரசியல் தலையீடு கிடையாது. 
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், சிறுபான்மையினரை திசை திருப்பி திமுக வெற்றி பெற்றிருக்கிறது. திமுக பெற்றிருப்பது உண்மையான வெற்றியல்ல. அதேநேரம், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே இருக்கிறது என்பதையும், அதிமுக ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வேலூர் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியிருக்கிறது.    மத்திய அரசின் நல்ல திட்டங்களை அதிமுக அரசு எப்போதும் ஆதரிக்கும் என்றார்.
முன்னதாக, மகபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 501 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் த.சு. ராஜசேகர், மாநகராட்சி ஆணையர் ச. விசாகன் மற்றும் பொதுப்பணித் துறை, கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT