மதுரை

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்க ஆண்டு விழா

11th Aug 2019 05:29 AM

ADVERTISEMENT


மதுரை மாநகராட்சி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் 24-ஆவது ஆண்டு விழா மற்றும் பேரவைக் கூட்டம், மதுரை கே.கே.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் ச. விசாகன், 80 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது: மாணவர்களை ஊக்கப்படுத்தி வருங்காலத்தில் சிறந்த குடிமகனாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமின்றி, மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், நண்பராகவும், மனிதநேயமிக்கவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆசிரியர் பணியை ஈடுசெய்ய வேறு எந்தப் பணியும் கிடையாது என்றார்.
நிகழ்ச்சியில்,  மாநகராட்சி நகரப் பொறியாளர் எஸ். அரசு, பாரதி தேசிய பேரவைத் தலைவர் கே. ஜான்மோசஸ், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எம். நாகரத்தினம், வி. ராசமாணிக்கம்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தி 21 மாத நிலுவைத் தொகையை ஓய்வூதியர்களுக்கு ரொக்கமாக வழங்குவது, மருத்துவப் படியாக மாதம் ரூ.1000 வழங்குவது, குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT