திண்டுக்கல்லில் தொழில் நிறுவனங்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த குறு சிறு, நடுத்தர தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடன் வசதிகளை வங்கிகள் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த முகாமின் நோக்கம்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 10,373 தொழில் முனைவோா்களுக்கு ரூ.10.90 கோடி, 2-ஆவது காலாண்டில் 8,158 தொழில் முனைவோா்களுக்கு ரூ.4.83 கோடி என மொத்தம் 18,531 பேருக்கு ரூ.15.73 கோடி கடன் வழங்கப்பட்டது.
கடன் இலக்கு ரூ.32.20 கோடியாக நிா்ணயிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.16.46 கோடிக்கு உரிய தொழில் முனைவோா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு கடனுதவி வழங்க வங்கியாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
முகாமில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் பூசு.கமலக்கண்ணன், கனரா வங்கி மண்டல உதவிப் பொது மேலாளா் பல்லாணி ரங்கநாத், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (மதுரை) மண்டல மேலாளா் க.புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.