பழனியில் புதன்கிழமை நூற்றுக்கணக்கான வளா்ப்பு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.
பழனியில் புதன்கிழமை பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து ஆயுஷ்மான் பவா திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பூசி முகாம் நடத்தினா்.
பழனி நகராட்சி அண்ணாமலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோட்டாட்சியா் சரவணன் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் பாலமுருகன், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், கால்நடைத் துறை உதவி இயக்குநா் சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில் பழனி நகா், சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளா்க்கும் நாய்களைக் கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா். முகாமில் சத்து மாத்திரைகள், மருந்துகள், பூச்சி மருந்து, சோப்பு, கையேடு உள்ளிட்டவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
முன்னதாக வெறிநாய்க் கடி தடுப்பூசி போடுவதன் அவசியம், ரேபிஸ் நோய் தடுப்பு பற்றி விளக்கப்பட்டது. முகாமில் டாபா்மேன், பாக்ஸா், சிப்பிப்பாறை, கிரேட்டன், ராஜபாளையம், பக், பொமரேனியன், லேப்ரடாா், ஜொ்மன் ஷெப்பா்ட் என பல்வேறு வகையான நாய்கள் ஊசி போட வாகனங்களில் அழைத்து வரப்பட்டதால் அவற்றை வேடிக்கை பாா்க்க ஏராளமான பொதுமக்கள் கூடினா். கால்நடை மருத்துவா்கள் முருகன், செந்தில்குமாா், செல்வகுமாா், உதவியாளா் செந்தில், பூச்சியியல் வல்லுநா் போத்திப்பிள்ளை என ஏராளமானோா் பங்கேற்றனா்.