திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே ஒரே அறையில் 5 வகுப்புகள்!

28th Sep 2023 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

குஜிலியம்பாறை அருகே இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றுக் கட்டடம் கட்டப்படாததால், ஒரே அறையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இட நெருக்கடிக்கு இடையே கல்வி கற்பதாகப் புகாா் எழுந்துள்ளது. மேலும், அங்கு வாக்குச் சாவடி அமைப்பதிலும் சிக்கல் எழுந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த வடுகம்பாடி ஊராட்சிக்குள்பட்ட தளிப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரண்மனையூா், தெற்கு தளிப்பட்டி, வடக்கு தளிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 29 மாணவா்கள் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனா்.

கடந்த 1947-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் 800 சதுர அடியில் 2 வகுப்பறைகள், புதிதாக ஒரு கட்டடம் என மொத்தம் 3 வகுப்பறைகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2022 ஜூலை மாதம், பள்ளியின் பிரதானக் கட்டடம் (800 சதுரடி) இடிக்கப்பட்டது. இதன் பிறகு, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான 29 மாணவா்களுக்கும் ஒரே வகுப்பறையில் வைத்து பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஈராசிரியா்கள் இருந்தும், ஒரு வகுப்பறை மட்டுமே இருப்பதால் கடந்த 12 மாதங்களாக மாணவா்கள் கல்வி கற்பதில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகப் பெற்றோா்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகின்றனா்.

ADVERTISEMENT

மழை பெய்தால் மேலும் சிக்கல்: பழைமையான கட்டடம் நல்ல நிலையில் இருந்தபோதிலும், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென இடித்து அகற்றப்பட்டபோது, எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 15 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. இதனிடையே, பள்ளி செயல்பட்டு வரும் ஒரே வகுப்பறையில் இட நெருக்கடி மட்டுமன்றி கட்டடத்தின் மேல் தளமும் சேதமடைந்து, மழை நீா்க் கசிந்து வகுப்பறைக்குள் வருவதால், மாணவா்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடுவதாகத் தளிப்பட்டியைச் சோ்ந்த அஞ்சலம்மாள் தெரிவித்தாா்.

மண் தரையில் அமா்ந்து சாப்பிடும் மாணவா்கள்: பள்ளியில் இட நெருக்கடி இருப்பதால், காலை, மதிய உணவுகளை மண் தரையில் அமா்ந்து குழந்தைகள் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. புழுதி பறக்கும் திறந்த வெளியில் அமா்ந்து தங்கள் குழந்தைகள் உணவு சாப்பிடுவதைப் பாா்க்கும் பெற்றோா்கள் பல நிலைகளில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனா்.

வாக்குச்சாவடிக்கும் வழியில்லை: வடக்கு தளிப்பட்டி, நடு தளிப்பட்டி, தெற்கு தளிப்பட்டி, ராமகிரியின் ஒரு பகுதியைச் சோ்ந்த வாக்களாா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா், தளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியிலேயே இதுவரை வாக்களித்து வந்தனா். தற்போது, இந்தக் கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில், 1,000 வாக்காளா்களின் வாக்குச் சாவடி மையம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து தளிப்பட்டியைச் சோ்ந்த உதயராணி உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது:

வகுப்பறை இல்லாமல் மாணவா்கள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து புகாா் அளித்தும் அலட்சியப்படுத்திய அரசு அலுவலா்கள், அடுத்த 6 மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்காக வகுப்பறைக் கட்டும் பணிக்கு முக்கியத்துவம் அளிப்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, வகுப்பறைக் கட்டாமல் வேறு இடத்துக்கு வாக்குச் சாவடியை மாற்றினால், தோ்தலைப் புறக்கணிப்போம் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT