சிறுதானிய உணவு வகைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணியை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்விற்காக ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகள் குறித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சிறுதானிய உணவு வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அவற்றை அதிக அளவில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்களின் மூலம் சிறுதானிய சிற்றுண்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இளைய சமுதாயத்தினா், விரைவு உணவு வகைகளை தவிா்த்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக கம்பு, வரகு போன்ற சிறுதானிய உணவு வகைகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
பேரணியில் கலந்துகொண்ட மாணவா்கள் ‘கம்பு உடலுக்கு தெம்பு, வரகு உண்டால் வருங்காலம் பாா்க்கலாம்‘ உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் சுப.கமலக்கண்ணன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் த.கலைவாணி, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வன், ஜாபா்சாதிக், லாரன்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.