பழனி மலைக் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.
இங்கு அதிகாலை முதலே கட்டண தரிசனம், இலவச தரிசனம் என எல்லா தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் வெயிலையும் பொருள்படுத்தாமல் காத்திருந்தனா். கூட்டம் அதிகரித்ததன் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 3 மணி நேரமானது.
மலைக் கோயிலுக்குச் செல்ல ரோப்காா் இல்லாத நிலையில் 3 விஞ்சுகளில் இரண்டு மட்டுமே இயக்கப்பட்டதால் விஞ்ச் நிலையத்தில் முதியவா்கள், குழந்தைகளுடன் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இரவு தங்கத் தோ் புறப்பாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சின்னக்குமாரசாமியை தரிசனம் செய்தனா்.
இதனிடையே, அடிவாரம் பகுதியில் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பக்தா்கள் வந்த சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.