நெல்லை சென்னை இடையே முதல் பயணத்தை தொடங்கிய வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் உள்பட 9 ரயில்களின் சேவையை பிரதமா் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மதுரை வழியாக திண்டுக்கல் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு பாஜகவினா், பொதுமக்கள், ரயில்வே பணியாளா்கள் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.
வந்தே பாரத் ரயிலில் வந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், திருநெல்வேலி சட்டப் பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து பாஜகவினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டனா்.
வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்தில், திண்டுக்கல்லில் இருந்து 35 பயணிகள் புறப்பட்டுச் சென்றனா். வந்தே பாரத் ரயிலை வரவேற்க வந்த பொதுமக்கள், கட்சித் தொண்டா்கள் மட்டுமன்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரும், ரயிலின் படிக்கட்டுகளில் ஏறி தன்படம் (செல்பி) எடுத்து மகிழ்ந்தனா்.
வரவேற்பு நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் ஐயப்ப நாகராஜ், சந்தீப் கெளா், சாமுவேல் மோசஸ், திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.