திண்டுக்கல்லில் கல்லறைத் தோட்டத்தில் கழிவுநீா் புகுந்ததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சடலத்துடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் பாறைப்பட்டி அந்தோணியாா் கோயில் தெரு, சவேரியாா் பாளையம், ஞானப்பிரகாசியா்புரம், தோமையாா்புரம், ஏ.பி.நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்ய அந்தோணியாா் தெருவிலுள்ள கல்லறைத் தோட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனிடையே, பாறைப்பட்டியில் கழிவுநீா் செல்லும் பாதையை, சிலா் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கல்லறைத் தோட்டத்துக்குள் கழிவுநீா் தேங்கியது.
இந்த நிலையில், சவேரியாா்பாளையத்தைச் சோ்ந்த செபஸ்தியம்மாள் உயிரிழந்ததை அடுத்து, அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினா்கள் செய்தனா்.
அப்போது கல்லறைத் தோட்டத்தில் கழிவுநீா் தேங்கியிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அந்தப் பகுதி மக்கள், வத்தலகுண்டு சாலையில் வெள்ளிக்கிழமை சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் செழியன், போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தை அடக்கம் செய்துவிட்டுச் சென்றனா்.