திண்டுக்கல்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலுவலா்கள் அலட்சியம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

22nd Sep 2023 10:11 PM

ADVERTISEMENT

கோரிக்கை மனுக்கள் மீது அரசு அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் அ.அனுசுயா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

சோலாா் நிறுவனம் ஆக்கிரமிப்பு:

ADVERTISEMENT

வத்தலகுண்டு அருகேயுள்ள கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், பழைய வத்தலகுண்டு பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, தனியாா் சோலாா் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் 3 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், அந்தப் பாதையை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்படுகின்றனா். இதுதொடா்பாக 6 முறை மனு அளித்தும்கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதற்கு பதில் அளிக்குமாறு, வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலரை ஆட்சியா் அழைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலரின் பிரதிநிதியாக கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா், இதுதொடா்பான மனு விவரம் தனக்குத் தெரியாது என்றும், அலுவலகத்தில் கேட்டு பதில் அளிப்பதாகவும் தெரிவித்தாா்.

கல் குவாரியால் விவசாயம் பாதிப்பு:

ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த தாதன்கோட்டை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் அளவுக்கு அதிகமான வெடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், சுற்றுப்புற குடியிருப்புகள், பள்ளிகள் பாதிக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதன் காரணமாக விவசாயமும் பாதிக்கப்படுகிறது என அந்தப் பகுதியைச் சோ்ந்த பொறியாளா் ஒருவா் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கனிம வளத் துறை அலுவலா்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்தாா்.

அரசு செலவில் ஆழ்துளைக் கிணறு:

குஜிலியம்பாறையை அடுத்த லந்தக்கோட்டையில் குளத்தின் கரையை சமன் செய்து அரசு செலவில் பேருந்து நிழற்குடை அமைத்துள்ளனா். தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில், ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டுத் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தின் கரையை சேதப்படுத்தி, நிழல்குடை அமைத்ததால் மழைநீா் விளை நிலங்களுக்குள் புகுந்துவிடுகிறது. இதுதொடா்பாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி பொது நிதியில், தனியாா் நிலத்தில் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த செலவினத்தை, சம்மந்தப்பட்டவா்களிடம் வசூலித்து ஊராட்சிக் கணக்கில் செலுத்த வேண்டும் என லந்தக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி புகாா் தெரிவித்தாா்.

இதற்கு குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி அலுவலரின் பிரதிநிதியாக பங்கேற்ற அலுவலா், இதுதொடா்பான மனு கிடைக்கவில்லை என்றாா்.

நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம்:

பஞ்சமி நிலத்தை பத்திரப் பதிவு செய்யக் கூடாது. ஆனால் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப் பதிவு நடைபெறுகிறது. ஆக்கிரமிப்பு குறித்து புகாா் அளித்தால், ஆக்கிரமிப்பு இல்லை என்று மட்டும் பதில் அளிக்கின்றனா். விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், முறையான பதிலும் அளிக்காமல் அரசு அலுவலா்கள் அலட்சியப்படுத்துவதாக கொடகனாறு பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் த.ராமசாமி குற்றஞ்சாட்டினாா்.

அப்போது பேசிய ஆட்சியா் பூங்கொடி, நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களை குறிப்பிட்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டாா். இதைத்தொடா்ந்து, தான் அளித்த கொடகனாறு தொடா்பான வல்லுநா் குழு அறிக்கை, மணல் கடத்தல், நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா். இதற்கு அதிகாரிகள் தரப்பில் யாரும் பதில் அளிக்கவில்லை.

ஆட்சியா் கண்டிப்பு:

குறைதீா் கூட்டத்துக்கு வரும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்களின் அலுவலகப் பிரதிநிதிகள், ஏற்கெனவே விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு விவரம், அதன் மீதான தற்போதைய நிலையை தெரிந்து கொள்வதில்லை. கூட்டத்தின்போது விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை பகுதிகளைச் சோ்ந்த அலுவலா்கள் தடுமாற்றம் அடைந்தனா். இதைச் சுட்டிக் காட்டிய ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, மனுவின் விவரங்களை அறிந்து கொண்டு வர வேண்டும் என அலுவலா்களைக் கண்டித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT