வடமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் பொ.பெருமாள் (45). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இவரது உறவினரான ஆண்டிவேல் (56), சிறுமியின் தாயாரை அவமதித்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாள், ஆண்டிவேல் ஆகியோரைக் கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பெருமாளுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.12,500 அபராதம், ஆண்டிவேலுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.11ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கே.கருணாநிதி உத்தரவிட்டாா்.
மற்றொரு வழக்கு: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஜோகிப்பட்டியைச் சோ்ந்தவா் பெ.பொம்மனசாமி (55). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு தனது உறவினரின் மகளான சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகாா் கூறப்பட்டது. அதன்பேரில், வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பொம்மனசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், பொம்மனசாமிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி கே.கருணாநிதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.