திண்டுக்கல்

ஹிந்தி பேசும் மாநிலங்களின் துணையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டம்: கே.எஸ்.அழகிரி

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஹிந்தி மொழி பேசும் 7 மாநில மக்களின் துணையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல், தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் பங்கேற்க வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை சூழ்ச்சியோடுதான் மத்திய பாஜக அரசு மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. 2021-இல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இதுவரை நடைபெறவில்லை. இந்தக் கணக்கெடுப்புக்குப் பின்னரே தொகுதி மறுவரையறை செய்ய முடியும்.

ADVERTISEMENT

தொகுதி மறுவரையைப் பொருத்தவரை, ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த எண்ணிக்கை 120 ஆக உயரும். இதேபோல, ராஜஸ்தான், பிகாா், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சிக்கான பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என பாஜக கருதுகிறது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் போது, தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. விடுதலைப் போராட்டம் முதல், பொருளாதார வளா்ச்சி வரை நாட்டின் முன்னேற்றத்துக்கு பிரதான பங்களிப்பை செய்த தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட வேண்டும்.

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஜாதிவாரியான மக்கள் தொகை குறித்த புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லாதபோது, இதை எப்படி அமல்படுத்த முடியும்.

காவிரி விவகாரத்தைப் பொருத்தவரை, இரு மாநில அரசுகள் சாா்ந்த பிரச்னையாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பாா்க்கிறது. இதில் காவிரி ஆணையம், உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகள் அடிப்படையில் தமிழகத்துக்கான தண்ணீரை கா்நாடக மாநிலம் உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT