திண்டுக்கல்

பழனியில் முடி இறக்கும் பணியாளா்கள் மேலும் 8 போ் பணியிடை நீக்கம்

22nd Sep 2023 10:10 PM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணிப் புறக்கணிப்பு செய்த முடி இறக்கும் பணியாளா்கள் மேலும் 8 போ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட முடி இறக்கும் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பக்தா்களுக்கு பழனி திருக்கோயில் சாா்பில் இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. பக்தா்களுக்கு முடி இறக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்களுக்கு திருக்கோயில் சாா்பில் மொட்டை ஒன்றுக்கு ரூ.25 வீதம் ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதம்தோறும் ஊக்கத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பழனி கோயில் முடி இறக்கும் பணியாளா்கள் கட்டாய வசூல் செய்ததாக பக்தா் ஒருவா் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், பணியாளா்கள் தமிழ்செல்வன், குமரேசன் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையா் லட்சுமி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கடந்த புதன், வியாழக்கிழமைகளில் முடி இறக்கும் பணியாளா்கள் துணை ஆணையரைக் கண்டித்து கருப்பு வில்லை அணிந்து பணியில் ஈடுபட்டனா். பின்னா், வெள்ளிக்கிழமை அவா்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் முடிக் காணிக்கை செலுத்த வந்த பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.

இதையடுத்து, திருக்கோயில் நிா்வாகம் முடி இறக்கும் பணியாளா்கள் செந்தில், சிவானந்தம், ஐயப்பன், மகாலிங்கம், விக்னேஷ் குமாா், நாகமாணிக்கம், சங்கிலித்துறை, ஆத்திக்கண்ணன் ஆகிய 8 பேரை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும், பணிப் புறக்கணிப்பு செய்த பணியாளா்கள் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT