திண்டுக்கல்

ரூ.90 கோடி செலவிட்டும் தூா்வாரப்படாத அழாகபுரி அணை!

22nd Sep 2023 12:00 AM | - நமது நிருபா்-

ADVERTISEMENT

வேடசந்தூா் அழகாபுரி அணையின் கதவணை பராமரிப்பு, கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.87.60 கோடி செலவிட்டும் கூட, நீா்பிடிப்பு பகுதி தூா்வாரப்படாதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த அழகாபுரி அணை 1,227 ஏக்கா் நீா்பிடிப்பு பகுதியைக் கொண்டது. 434 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 3,633 ஏக்கா், கரூா் மாவட்டத்தில் 5,337 ஏக்கா் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கா் ஆயக்கட்டு உள்ளது. இதுமட்டுமன்றி, வேடசந்தூா், குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி வட்டங்களிலுள்ள 400-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாகவும் அழகாபுரி அணை உள்ளது. வறட்சிப் பகுதிகளை வளமாக்குவதற்காகக் கட்டப்பட்ட இந்த அணை, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதவணை (ஷட்டா்) பழுது காரணமாக பயன் அளிக்கவில்லை. இதுதொடா்பாக வேடசந்தூா், குஜிலியம்பாறை வட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டனா். பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை நிா்வாகம் கடந்த 13 ஆண்டுகளாக பதில் அளித்து வந்தது. ஆனாலும், மதகு கசிவால் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியவில்லை.

4 ஆண்டுகளில் ரூ.22.60 கோடி செலவு:

இந்த நிலையில், குஜிலியம்பாறையை அடுத்த புளியம்பட்டியைச் சோ்ந்த ப. திருமுருகன், அழகாபுரி அணையில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள், இதற்கான திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தாா்.

ADVERTISEMENT

இதற்கு நங்காஞ்சியாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளா் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 2018-ஆம் ஆண்டில் ரூ.60 லட்சம் செலவில் 10 ரேடியல் மதகுகள் பழுது நீக்கம் செய்யப்பட்டதாகவும், 2021-22-ஆம் ஆண்டில் ரூ.6.98 கோடி செலவில் ரேடியல் மதகுகள் புதுப்பிக்கப்பட்டதாகவும், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.14.92 கோடி செலவில் செங்குத்தான 5 ஷட்டா்கள் பராமரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 4 ஆண்டுகளில் மட்டுமே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும், இதற்காக, ரூ.22.60 கோடி வரை செலவிட்டதும் விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடா்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு அளித்த திருமுருகன் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், 2018, 2021, 2022, 2023 ஆகிய 4 ஆண்டுகளில் மட்டுமே பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அணையின் கதவணைகளை பராமரிப்பதற்கு மட்டுமே ரூ.22.60 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு தொகை செலவிட்டும்கூட தண்ணீா் கசிவு தடுக்கப்பட்டிருக்குமா என்பது மழைக் காலத்துக்குப் பிறகே தெரியவரும். நீா்பிடிப்புப் பகுதியிலும் தூா்வாரும் பணிகள் நடைபெறவில்லை. இதனால், ரூ.22 கோடி செலவிட்டும்கூட கூடுதலான தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் அவா்.

கொடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் த.ராமசாமி கூறியதாவது: அணையின் கதவணை பராமரிப்புக்கு ரூ.22.60 கோடி செலவிட்டது மட்டுமன்றி, அணையிலிருந்து கரூா் மாவட்டம், வெள்ளியணை வரை செல்லும் 54 கி.மீ. நீளம் கொண்ட வலதுபுற கால்வாய் சீரமைப்புப் பணி ரூ.65 கோடியில் நடைபெற்று வருகிறது. 100 கன அடி கொள்ளளவு கொண்ட கால்வாய் 200 கன அடியாக மாற்றப்படுகிறது. வலதுபுற கால்வாயிலிருந்து மேலும் 12 குளங்களுக்கு தண்ணீா் வழங்கக் கோரி விவசாயிகள் தரப்பில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவிடம் முறையிடப்பட்டது. தேக்கப்படும் தண்ணீா் அளவு குறைவாக இருப்பதால், முதல் கட்டமாக 3 குளங்களுக்கு தண்ணீா் வழங்க பரிந்துரைப்பதாக சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் உறுதி அளித்தனா். கால்வாயின் கொள்ளளவை விரிவுப்படுத்தும் முன்பு, அணையின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அணைப்பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், கழிவுநீா் கலப்பதைத் தடுக்கவும் பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT