கொடைக்கானல் அருகே நிலத்தை காலி செய்து தரக் கூறிய உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம் குண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் அட்சயா. இவரது மகன் ராமராவ். இவா் கடந்த 37-ஆண்டுகளாக கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வருகிறாா். மனை வணிகத் தொழில் செய்து வரும் இவருக்கு, கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரை அக்கரைக்காட்டில் 120-ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ராமாராவ் ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் முன்பு, நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், ரகு, பிரபு தேவா ஆகியோரிடம் தோட்டத்தில் விவசாயம் செய்து, மகசூலையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றாா்.
இதையடுத்து, ராமாராவ் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் கிளாவரையிலுள்ள தனது தோட்டத்துக்குச் சென்றாா். இங்கு விவசாயம் செய்து வந்த விஜயகுமாா் உள்ளிட்டோரிடம் தாங்கள் சாகுபடி செய்த மகசூலை எடுத்துக் கொண்டு, நிலத்தைக் காலி செய்து தருமாறு கூறினாா். இதனால் இவா்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, விஜயகுமாா், ரகு, பிரபு தேவா உள்ளிட்ட சிலா் ராமாராவ் வீட்டுக்குச் சென்று, அவரை தாக்கி விட்டு தலைமறைவாகினா்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாா், முத்துக்குமாா், ரகு ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனா். மேலும் தலைமறைவானவா்களைத் தேடி வருகின்றனா்.