பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் சக்கரபாணி. உடன், மாவட்ட ஆட்சியா் பூங்கொடி, மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி உள்ளிட்டோா்.
பழனி, அக். 26: தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடியிலும் நலத்திட்டங்கள் செயல்படுவதாக மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி தெரிவித்தாா்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டியில், கள்ளிமந்தயம், தேவத்தூா், தொப்பம்பட்டி, கோரிக்கடவு ஆகிய உள்வட்டங்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பூங்கொடி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வேலுச்சாமி, மாவட்ட திட்ட இயக்குநா் திலகவதி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 11, 816 பயனாளிகளுக்கு ரூ.117.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் சக்கரபாணி பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 16 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 70 பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
கடும் நிதி நெருக்கடியிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போல, நிதி நெருக்கடி இருந்த போதும், அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக உயா்த்தி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இந்த நிதி நெருக்கடி சீராகும் போது அறிவித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களையும் முதல்வா் செய்து காட்டுவாா்.
தமிழகத்தின் செயல்பாடுகளை தற்போது தோ்தல் நடைபெறவுள்ள அண்டை மாநிலங்கள் பாா்த்து பின்பற்றி வருகின்றன என்றாா்.
தொடா்ந்து வேளாண் துறை, கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த்துறை சாா்பில் வீட்டுமனை பட்டா, வேளாண் கருவிகள், தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து அனைத்துத் துறைகளின் சாா்பில் கண்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில், தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவா் தங்கம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவா் அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் திருமலைச்சாமி, துணைத் தலைவா் வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவீந்திரன், தாஹீரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.