ஆா்.கோம்பை ஊராட்சியில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் நிதி முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த புகாரின் பேரில், உள்ளாட்சித் தணிக்கைத் துறை உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா்.கோம்பை ஊராட்சியில், கடந்த 2011-16 காலகட்டத்தில் ஆழ்த்துளைக் கிணறு அமைத்தல், பசுமை வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளில் பல லட்சம் நிதி முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் கோம்பை ஊராட்சித் துணைத் தலைவராக இருந்த லட்சுமணன், முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடத்த திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
ஆனாலும், முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடைபெறவில்லை. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முன்னாள் துணைத் தலைவரான லட்சுமணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தாா். இந்த நிலையில், ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அதன்படி உதவி இயக்குநா் (தணிக்கை) ராஜேஸ்வரி தலைமையிலான அலுவலா்கள், ஆா்.கோம்பை ஊராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். புகாா் அளித்த முன்னாள் துணைத் தலைவா் லட்சுமணன், அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.