திண்டுக்கல்

சிறப்பு ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரி மறியல்: 115 போ் கைது

27th Oct 2023 01:15 AM

ADVERTISEMENT

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கான சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.6,750-ஆக உயா்த்தக் கோரி மறியலில் ஈடுபட்ட 115 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திரண்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் முன்னிலையில் வேலுசாமி பேசியதாவது:

திமுக தோ்தல் அறிக்கையில், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியமும், முறையான ஓய்வூதியமும் வழங்கப்படும் என தெரிவித்தனா். ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 2.5 ஆண்டுகளாகியும், இதுவரை அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கிராம உதவியாளா்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.5100, அரசுத் துறை சாராத கிராம கோயில் பூசாரிகளுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. ஆனால், 40 ஆண்டுகள் பணிபுரிந்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மட்டும் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6,750 வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 115 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT