வேடசந்தூா் அருகே 10-ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குமரன்கரடு பகுதியைச் சோ்ந்தவா் சதீஸ்வரன். இவரது மனைவி சத்யா. இவா்களது மகள்கள் மணிமேகலை (15), கனிஷ்கா (14). கடந்த 2 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள நூற்பாலையில் சதீஸ்வரன், சத்யா தம்பதியினா் பணிபுரிந்து வருகின்றனா்.
காசிபாளையத்திலுள்ள பள்ளியில் மணிமேகலை 10-ஆம் வகுப்பும், கனிஷ்கா 9-ஆம் வகுப்பும் படித்து வந்தனா். 5 நாள்கள் விடுமுறைக்கு பின் செவ்வாய்க்கிழமை மீண்டும் பள்ளி திறக்கப்பட்டபோதிலும், மணிமேகலை, கனிஷ்கா ஆகிய இருவரும் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனிடையே, மணிமேகலை செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த, போலீஸாா் உடற்கூறாய்வுக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.