நிலக்கோட்டை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆத்தூா் நீதிமன்றத்திலும், குச்சனூரிலும் தூய்மைப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள ஆத்தூரில் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றத்தில், திங்கள்கிழமை தூய்மைப் பணிகள் நடைபெற்றன. முன்னதாக, மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெய்சங்கா் தூய்மைப் பணியில் ஈடுபட்டாா்.
இதில் வழக்குரைஞா்கள் திருமூா்த்தி, ராமச்சந்திரன், வீரபாண்டி, தவராஜ் ஆஜிஸ், கன்னிவாடி வனச்சரங்கா் ஆறுமுகம், வன அலுவலா் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், குச்சனூா் முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலா் சுருளிவேல் தலைமையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதில், குச்சனூா் பேரூராட்சியில் தெருக்கள், ராஜபாளையம், துரைச்சாமிபுரம் பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய் சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பல்வேறு தூய்மைப் பணிகள் நடைபெற்றன.