பழனி: தொடா் விடுமுறை தினத்தையொட்டி, பழனியில் திங்கள்கிழமை பக்தா்கள் அதிகளவில் குவிந்ததால் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் காத்திருந்தனா்.
பழனியில் திங்கள்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரமானது. ஞாயிற்றுக்கிழமை முதல் மலைக் கோயிலுக்கு கைப்பேசி, புகைப்படக் கருவி கொண்டு செல்ல நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோயில் நிா்வாகம் தடை விதித்தது.
அடிவாரத்தில் ரூ. 5 கட்டணத்தில் கைப்பேசிகள் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி 12 ஆயிரம் கைப்பேசிகள் பாதுகாப்பு மையத்தில் பெறப்பட்டன. இருந்தபோதிலும், பெண்கள் பலரும் கைப்பேசியை மறைத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினா். இரவு தங்கத்தோ் புறப்பாட்டிலும் ஏராளமான பக்தா்கள் காத்திருந்து சின்னக்குமாரசாமியை தரிசனம் செய்தனா்.
பழனி பேருந்து நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் பக்தா்கள் மட்டுமன்றி, விடுமுறை முடிந்து தங்கள் ஊா்களுக்கு வேலைக்கு செல்வோா், கல்லூரிக்குச் செல்வோா் என பலரும் குவிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.