திண்டுக்கல்

மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

18th Nov 2023 07:29 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் மாலை அணிந்து ஆண்டுதோறும் யாத்திரை செல்கின்றனா். தமிழ் மாதத்தின் முதல் 5 நாள்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டிருந்தாலும், காா்த்திகை, மாா்கழி மாதங்களில்தான் திரளான பக்தா்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கின்றனா்.

இதன்படி, காா்த்திகை முதல் நாளான வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீ ஐயப்பன் கோயில், ரயிலடி ஸ்ரீ ஐயப்பன் மணி மண்டம், திருமலைசாமிபுரம் ஐயப்பன் கோயில் உள்பட திண்டுக்கல் பகுதியிலுள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும், காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, விரதம் தொடங்கும் ஐயப்ப பக்தா்கள் பலா் சூரிய உதயத்துக்கு முன்னதாக மாலை அணிந்து கொண்டனா். இதேபோல, ரயிலடி சித்தி விநாயகா் திருக்கோயில், வெள்ளை விநாயகா் கோயில், மடத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

ADVERTISEMENT

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு கலியுக வரத ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

கன்னி சாமிகளுக்கு குருசாமி மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கிவைத்தாா். காா்த்திகை முதல் நாளான வெள்ளிக்கிழமை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை 300-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.

உத்தமபாளையத்தில்...

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஐயப்பன் மணி மண்டபத்தில் குருசாமி லோகேந்திர ராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

பழனியில்...

பழனிக் கோயிலில் கந்தசஷ்டி, காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

மாதப் பிறப்பையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆனந்த விநாயகா் சந்நிதி முன் தனூா்பூஜை நடத்தப்பட்டு, விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

அடிவாரம் பாதவிநாயகா் கோயில், ஐயப்பன் கோயில் என பல கோயில்களிலும் ஐயப்ப பக்தா்கள் துளசி மாலையணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT