திண்டுக்கல்

பழனியில் சூரசம்ஹாரம்: திரளான பக்தா்கள் தரிசனம்இன்று திருக்கல்யாணம்

18th Nov 2023 11:59 PM

ADVERTISEMENT

 

கந்த சஷ்டியையொட்டி, பழனியில் சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சண்முகா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ஆம் தேதி மூலவா், உற்சவா், சண்முகா், பரிவார தெய்வங்களுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெற்ற விழாவையொட்டி, மலைக் கோயிலில் தினமும் கல்ப பூஜையுடன், உச்சிக் கால பூஜையும் நடத்தப்பட்டு, சண்முகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

ஆறாம் நாளான சனிக்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை 4 மணியளவில் மலைக் கோயிலில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு உச்சிக் கால பூஜையும், பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற்றன.

ADVERTISEMENT

முக்கிய நிகழ்ச்சியான சின்னக்குமாரசுவாமி அசுரா்களை வதம் செய்யும் வகையில், மலைக் கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் சந்நிதி திருக்காப்பிடப்பட்டு, கோயில் யானை கஸ்தூரி முன்னே வர படி வழியாக சுவாமி அடிவாரத்தை வந்தடைந்தாா்.

மாலை 4.30 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வெள்ளி மயில் வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினாா். மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் யானை முக சூரன் வதம் நடைபெற்றது. பின்னா், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் சூரன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றன. கடைசியாக சூரனை வதம் செய்த பின்னா் சூரபத்மன் சேவலாக மாறுவதை தெரிவிக்கும் விதமாக சேவல் பறக்கவிடப்பட்டது.

இரவு முத்துகுமாரசுவாமி, சூா்தடித்து வரும் சின்னக்குமாரசாமியை சந்தித்தல், ஆரிய மண்டபத்தில் வெற்றி விழா ஆகியன நடைபெற்றன. சுவாமி வெற்றிவேலுடன் மலைக்குச் சென்றாா்.

மலைக் கோயிலில் சம்ரோட்சண பூஜைகளும், அா்த்த ஜாம பூஜையும் நடத்தப்பட்டன.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் (பொறுப்பு) லட்சுமி, அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், அறங்காவலா்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன், சத்யா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை (நவ.19) காலை 9 மணிக்கு மலைக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கும், மாலை 6 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துகுமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT