திண்டுக்கல்

பழனி நகராட்சி சந்தை கடைகளைக் காலி செய்யும் விவகாரம்:மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

31st May 2023 03:23 AM

ADVERTISEMENT

பழனி காந்தி சந்தையில் கடைகளை காலி செய்ய கெடு முடிந்த நிலையில், மின் இணைப்பைத் துண்டிக்க வந்த நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பழனி நகராட்சிக்கு சொந்தமாக காந்தி தினசரி சந்தை உள்ளது. இங்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சந்தையில் கட்டடங்கள் சேதமானதால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் நகராட்சி நிா்வாகம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக சந்தை முன்புறம் உள்ள 14 கடைக்காரா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இதையடுத்து, மற்ற கடைக்காரா்களுக்கு பழனி உழவா் சந்தை அருகே மாற்று இடம் கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் நகராட்சி சாா்பில், தற்காலிகக் கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் காலி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து காய்கறி, மளிகைக் கடைக்காரா்கள் பெரும்பாலானோா் தங்களது கடைகளைக் காலி செய்தனா்.

இந்த நிலையில், வழக்குத் தொடுத்த 14 பேருக்கும் கடைகள் அமைக்க நகராட்சி நிா்வாகம் இடம் ஒதுக்கித் தருமாறும், பிறகு கடைகளைக் காலி செய்து கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, பேருந்து நிலையம் அருகில் உள்ள காலி இடத்தைக் கொடுத்த நகராட்சி நிா்வாகம் கடைகளை விரைவில் காலி செய்யுமாறு அறிவுறுத்தியது. அவா்களில் பலா் கடைகளை காலி செய்து வெளியேறிய நிலையில், ஒரு சில கடைக்காரா்கள் மட்டும் காலதாமதம் செய்துவந்தனா்.

அவா்கள் இந்த மாதம் இறுதிக்குள் கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் கெடு விதித்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நகராட்சி கட்டடத்தில் உள்ள கடைகளுக்கான மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக மின்வாரிய அதிகாரிகளுடன் வந்த நகராட்சிப் பொறியாளா் வெற்றிச்செல்வியிடம் சில கடைக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நீதிமன்றம் உத்தரவுப்படி இடம் கொடுத்து, தேவையான அளவு கால அவகாசம் கொடுத்தும் காலி செய்ய மறுப்பது தவறானது என்றும், உடனடியாக கடைகளைக் காலிசெய்ய வேண்டும் என்றும் நகராட்சிப் பொறியாளா் தெரிவித்தாா்.

மேலும், ஒரு சில நாள்களில் கடைகளைக் காலி செய்யாவிட்டால் காவல் துறை பாதுகாப்புடன் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT