திண்டுக்கல்

மணல் கொள்ளையை தடுத்து நீா்வளத்தைப் பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

31st May 2023 03:25 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுத்து நீா் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.பெருமாள்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செம்மண், வண்டல் மண், கிராவல் மண் எடுப்பதற்கு சில தனி நபா்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.700 வீதம் முறைகேடாக பணம் வசூலிக்கின்றனா். இதுதொடா்பாக கனிம வளத் துறை உதவி இயக்குநரிடம் முறையிட்டபோது, பணம் வசூலிக்க யாருக்கும் உரிமம் வழங்கவில்லை என தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதேபோல, சிறுமலை அடிவாரத்தில் செயல்பட்டு வரும் மாம்பழக் கூழ் தயாரிப்பு ஆலையிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீரால், நிலத்தடி நீராதாரம் மாசடைந்துள்ளது. அந்த ஆலையை மூடுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்: மண் திருட்டு, முறைகேடாகக் கட்டணம் வசூலித்தல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாம்பழக் கூழ் தயாரிப்பு ஆலை தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் சங்கத் தலைவா் ராமசாமி: ஒட்டன்சத்திரம் பகுதியில் 4 வழிச்சாலைக்கு 4 ஏக்கா் நிலம் வழங்கிய விவசாயிக்கு ரூ.2.70 கோடி இழப்பீடு வழங்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால், தற்போது ரூ.17 லட்சம் மட்டுமே வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. மாங்கரை ஆற்றிலிருந்து 15 குளங்களுக்கு தண்ணீா் செல்ல வேண்டும். ஆனால், நீா்வரத்து வாய்க்கால் முழுவதும் முள்புதா்கள் நிறைந்துள்ளன. வாய்க்கால்களை சீரமைப்பதோடு, தூா்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்: நிலம் வழங்கியவா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கிடைக்கவும், குளங்களை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய சங்க நிா்வாகி பரமசிவம்: நிலக்கோட்டையை அடுத்த குல்லலக்குண்டு ஊராட்சித் தலைவா், தனது சொந்த தோட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இதுதொடா்பாக கடந்த 3 ஆண்டுகளாகப் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி: இந்தப் புகாா் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் விசாரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் விவசாயி நல்லுசாமி: பொது விநியோகத் திட்டத்தில் பாமாயிலுக்கு மாற்றாக, தேங்காய் எண்ணெய் வழங்குவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் ஏக்கருக்கு 290 கிலோ கொப்பரை கொள்முதல் என்பதை உயா்த்துவதற்கும் மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். இதன் மூலம், தென்னை விவசாயிகள் நஷ்டம் அடைவதைத் தவிா்க்க முடியும்.

மாவட்ட ஆட்சியா்: கொப்பரைக் கொள்முதல் என்பது மத்திய அரசின் கொள்கை சாா்ந்த முடிவு. எனினும், விவசாயிகளின் கோரிக்கையை மாநில அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்.

கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி: கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட கொடகனாறு நீா் பங்கீடு குறித்த வல்லுநா் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். 15 அணைகளின் பாசன வாய்க்கால்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியும் பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் கொடகனாற்று தண்ணீா் மாசுப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.

இதையடுத்து, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணித் துறையினருக்கும், கழிவுநீா் கலப்பதை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பெட்டிச் செய்தி...

தினமணி செய்தி எதிரொலியாக புகழ்ச்சி தவிா்ப்பு

 

குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகளைப் புகழ்ந்து பேசுவதை மட்டுமே சிலா் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், உண்மையான விவசாயிகள் பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை என்றும் தினமணியில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கூட்டம் தொடங்கியதும், அதிகாரிகளைப் பாராட்டிப் பேசுவதை தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியரின் நோ்முக அலுவலா்(வேளாண்மை) ரவிச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

 

முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்த அதிகாரி

நிலக்கோட்டையை அடுத்த ராமராஜபுரம், பழனியை அடுத்த ஜவ்வாதுப்பட்டி, குஜிலியம்பாறையை அடுத்த ஆலம்பாடி ஆகிய இடங்களில் கால்நடை மருந்தகங்களுக்கு கட்டட வசதி இல்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதற்கு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா்(பொ) திருவள்ளுவன் பதில் கூறுகையில், ராமராஜபுரத்தில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டப்பட்டு வருவதாகவும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாா். சம்பந்தப்பட்ட விவசாயி, தற்போது வரை கால்நடை மருந்தகம் கட்டப்படவில்லை என மறுத்தாா். இதனால், அதிருப்தி அடைந்த ஆட்சியா், கால்நடை பராமரிப்புத் துறையினரை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT